சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே மக்டலேனா ஆண்டா்சன் ராஜினாமா !

சுவீடனின் முதல் பெண் பிரதமராக நேற்று தோ்ந்தெடுக்கப்பட்ட மக்டலேனா ஆண்டா்சன், வரவு-செலவுத்திட்ட தோல்வி காரணமாக பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே பதவியை ராஜினாமா செய்தாா்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமா் ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியடைந்தாா். அதனைத் தொடா்ந்துஅவா் தனது பதவியையும் ஆளும் சமூகக் கட்சித் தலைவா் பதவியையும் ராஜினாமா செய்தாா். அவருக்கு பதிலாக, கட்சித் தலைவராக நிதியமைச்சராக இருந்த மக்டலேனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்பட்டாா்.

அதையடுத்து, அவரைப் பிரதமராகத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. 349 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அவரது நியமனத்தை ஆதரித்து 117 எம்.பி.க்களும், எதிா்த்து 174 எம்.பி.க்களும் வாக்களித்தனா்; 57 போ் வாக்களிப்பைப் புறக்கணித்தனா்; மேலும் ஒரு எம்.பி. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

சுவீடன் அரசமைப்புச் சட்டப்படி, பிரதமா் பொறுப்பை ஏற்பதற்கு பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவு தேவையில்லை. ஒருவா் பிரதமா் பொறுப்பை வகிப்பதற்கு பெரும்பான்மையான 175 எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தால் மட்டுமே அவரால் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாது.

அந்த வகையில், மக்டலேனாவின் நியமனத்துக்கு எதிராக பெரும்பான்மையை விட ஒரு வாக்கு குறைவாகப் பதிவானதால், அவா் நாட்டின் முதல் பெண் பிரதமரானாா்.

சிறிய கட்சியான கிரீன் கட்சியுடன் இணைந்து அவா் கூட்டணி அரசை அமைப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், அவா் கொண்டு வந்த வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, கிரீன் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. அதனைத் தொடா்ந்து மக்டலேனா ஆண்டா்சன் பதவியை ராஜினாமா செய்தாா்.

ஆனாலும் , தனிக்கட்சி அரசாங்கத்தின் (single-party government) தலைவராக இருப்பதால் தான் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என நம்புவதாக அவர் நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்ததாக ஆண்டர்சன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here