உடல் உறுப்பு தானம் : மனித இனத்திற்கு கிடைத்த வரம்

நெருங்கிய ஒருவரின் மரணம் என்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால், அந்தத் தருணத்தில், ஒருவர் உறுப்புகளைத் தானமாகத் தர முன்வந்து, முகமறியா சிலரைக் காப்பாற்ற முன்வருவதற்கு மிகப் பெரும் கருணையும் மனமும் வேண்டும். இயலாத சிலருக்கு உறுப்புகளைத் தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம்.

ஒருவர் வாழ்வதற்குத் தேவையான முக்கிய உறுப்பு செயலிழந்து அதனால் வாழ முடியாத சூழ்நிலையில், வேறொருவரின் உறுப்பைப் பொருத்தி ஒரு புதிய வாழ்வை அளிக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் போற்றப்பட வேண்டிய சாதனை.

அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலகளவில் ‘உடல் உறுப்பு தான நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. சக மனிதர்களுக்கு வாழ்வளிக்க, ஒவ்வொருவரையும் உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். போதிய விழிப்புணர்வு இல்லாததால், உடல் உறுப்பு தானம் செய்ய அச்சப்படும் மக்களிடையே இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி ”உடல் உறுப்பு தான நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

முதல் தானம்

1954-ல் அமெரிக்காவில் முதன்முதலில் வாழும் ஒருவருடைய உறுப்பு வெற்றிகரமாக தானம் செய்யப்பட்டது. இதுவே முதல் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை. இரட்டை சகோதரர்களான ரொனால்ட் மற்றும் ரிச்சர்ட் ஹெரிக் இடையே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக டாக்டர் ஜோசப் முர்ரே என்பவருக்கு 1990-ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 உடல் உறுப்பு தானம்- வகைகள் 

உடல் உறுப்பு தானத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று உயிருடன் இருக்கும் போது உடல் உறுப்புகளை தானம் செய்வது. இதில், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்புகளை தானம் செய்யலாம். உயிருடன் இருக்கும்போது ஒருவர் சிறுநீரகம், கல்லீரலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி போன்ற உறுப்புகளை தானம் செய்யலாம்.

மற்றொன்று இறந்தபின் உறுப்புகளை தானம் செய்வது. இறந்தவரின் உடல் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினரின் அனுமதியுடன் தானமாகப் பெறலாம். இயற்கை மரணத்தின்போது கண்கள், இதய வால்வு, தோல், எலும்புகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம். மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் ஆகிய முக்கிய உறுப்புகள் அனைத்தும் பெற முடியும்.  ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்யும்போது குறைந்தபட்சம் 8 பேரை காப்பாற்ற முடியும். அதிகபட்சமாக 75 பேரை காப்பாற்ற முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

உடல் உறுப்பு தானம் யார் செய்யலாம்? 

உறுப்பு தானம் செய்வதற்கான வயது வரம்பு மாறுபடும். உயிருள்ள ஒருவர் தானம் செய்ய விழைந்தால் அவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், இது நபரின் உடல்நிலை மற்றும் சூழ்நிலையைப் பொருத்தது. இயற்கை மரணம் அல்லது உயிரிழந்தவர் தங்களது உறுப்புக்களை தானம் செய்ய வயது வரம்பு இல்லை.  முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.

கார்னியா, இதய வால்வுகள், தோல் மற்றும் எலும்பு போன்றவற்றை இயற்கை மரணம் ஏற்பட்டால் தானம் செய்யலாம். ஆனால் இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளை ‘மூளைச் சாவு’ ஏற்பட்டால் மட்டுமே தானமாக வழங்க முடியும். பொதுவாக விபத்தில் தலையில் பலத்த அடி ஏற்பட்டால் மூளைச்சாவு நிகழும்.

இதயம், கணையம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் மாற்றப்படும்போது பெரும்பாலாக பெறுநர் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்.  புற்றுநோய், எச்.ஐ.வி., நீரிழிவு, சிறுநீரக நோய், அல்லது இதய நோய் உள்ளவர்கள் உறுப்பு தானம் செய்வதைத் தவிர்க்கலாம்.

எந்தெந்த உறுப்பு எந்தெந்த வயது வரை தானம் செய்யலாம்?

சிறுநீரகங்கள், கல்லீரல்: 70 வயது வரை
இதயம், நுரையீரல்: 50 ஆண்டுகள் வரை
கணையம், குடல்: 60-65 வயது வரை

கார்னியா, தோல்: 100 ஆண்டுகள் வரை
இதய வால்வுகள்: 50 ஆண்டுகள் வரை
எலும்பு: 70 ஆண்டுகள் வரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here