கிளந்தானில் இந்த ஆண்டு பாலியல் வன்முறை வழக்குகள் அதிகரிப்பு

கோத்தா பாரு, நவம்பர் 27 :

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதுவரை 93 பாலியல் வன்முறை வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்றும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷஃபின் மாமட் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாநிலத்தில் ஒட்டுமொத்த குற்றக் குறியீடு குறைந்துள்ளது, ஆனால் பாலியல் வன்முறை வழக்குகள் 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளது, இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 86 ஆக இருந்தது.

“கோத்தா பாரு மற்றும் பச்சோக் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் நேற்றிரவு மாநில தலைமையக ஊடகப் பிரிவைத் தொடங்கி வைத்த போது டத்தோ ஷஃபின் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கிளந்தான் மாநில துணை போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் ஜாக்கி ஹாருன் மற்றும் அனைத்து மாவட்ட போலீஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

“பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான பாலியல் வன்முறை வழக்குகள் பதின்ம வயதினரும் அவர்களது கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டது “என ஷஃபின் கூறினார்.

“பெரும்பாலான வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் சந்தேக நபர்களை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் இன்னும் வயது குறைந்தவர்களாக இருப்பதால், அவர்களின் குடும்பத்தினர் மூலமாகவே பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க முடிகிறது.

“ஆனால் இன்னும் பல பலாத்கார வழக்குகள் காவல்துறையில் புகார் செய்யப்படாது உள்ளதாக போலீசார் நம்புகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட புகார்கள் தொடர்பில், பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் 90 விழுக்காடு பாலியல் வன்முறை வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் ஷஃபின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here