கிள்ளானில் குத்தகையாளர் ஒருவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் இருவரை நான்கு மணி நேரத்திற்குள் கைது செய்து போலீஸ் அதிரடி

ஷா ஆலம், டிசம்பர் 11 :

நேற்று இங்குள்ள கிள்ளான், கம்போங் இடமானில் குத்தகையாளர் ஒருவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரண்டு நபர்களை, நான்கு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

33 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் கைது செய்யப்பட்டதாக தெற்கு கிள்ளான் காவல்துறை தலைமை துணை ஆணையர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 69 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர், வெள்ளிக்கிழமை தொழுகைக்காகச் சென்று கொண்டிருந்த போது, அவரது வீட்டின் முன்னால் வைத்து கத்தியால் குத்தப்பட்டதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் ஆரம்ப விசாரணையில் அறிய முடிகிறது என்றார்.

மேலும் “முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் வேலையில்லாதவர், மற்றொருவர் சுயதொழில் செய்பவர் என்றும் இருவருமே பாதிக்கப்பட்டவருக்கு நன்கு தெரிந்தவர்களாவர்.

“கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர், மேலும் சம்பவத்தின் நோக்கத்தை அறிய விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்கிய சந்தேகநபரின் மீது ஒரு முந்தைய குற்றப் பதிவும் இரண்டு போதைப்பொருள் சம்பந்தமான பதிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here