உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் ரஷ்யாவை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டனின் லிவா்பூல் நகரில், சனிக்கிழமை நடைபெற்ற ஜி7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் எலிசபெத் டிரஸ் கூறியதாவது:
உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்தால், அந்த நாடு கடும் பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டிருக்கும். உக்ரைனை ஆக்கிரமிக்கும் முடிவு ரஷ்யாவின் மோசமான தவறாக இருக்கும்.
அத்தகைய நிலை ஏற்பட்டால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான தடைகள் விதிக்கப்படும்.
ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாப்பதற்கு ஜி7 நாடுகள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் செயல்படும். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்துடைய மற்ற நட்பு நாடுகளையும் நம்முடன் இணைந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்