கோலாலம்பூர்:
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை (பிப்ரவரி 4) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 5,044.74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகி, ஒரே நாளில் இரண்டு விழுக்காடு விலை உயர்வைச் சந்தித்தது.
முன்னதாக, பிப்ரவரி 3-ஆம் தேதி தங்கத்தின் விலை 5.9 விழுக்காடு அதிகரித்தது. இது 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரே நாளில் பதிவான மிகப்பெரிய விலை உயர்வாகக் கருதப்படுகிறது.
இந்தத் திடீர் விலை மாற்றத்திற்கு உலகச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முக்கிய நாடுகளின் பணத்திற்கு எதிராக டாலரின் மதிப்பு குறைந்ததால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் 29-ஆம் தேதி, ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594.82 அமெரிக்க டாலர் என்ற வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் மீதான இந்த அதீத ஆர்வம் சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. டாலர் மதிப்பு சரிந்து வரும் நிலையில், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய விலை ஏற்றம், நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.




















