கோலாலம்பூர், டிசம்பர் 15 :
கடந்த திங்கட்கிழமை, இணைய மோசடியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், ஜாலான் கூச்சாய் மாஜூவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இணைய மோசடிக்குழுவினர் என நம்பப்படும் மூன்று உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதியில் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து மூன்று மடிக்கணினிகள், மூன்று கைத்தொலைபேசிகள், ஒரு வைஃபை மோடம் மற்றும் ஒரு நோட்புக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன என பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களை கவர வீ சாட் (Wechat) செயலியை பயன்படுத்தி வந்துள்ளனர் என்றார்.
“இந்த மோசடிக்கும்பல் ஆகஸ்ட் 2020 முதல் உள்ளூர் மக்களைக் குறிவைத்து செயல்பட்டு வருவது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 ஆகியவற்றின் கீழ் அனைத்து சந்தேக நபர்களும் மோசடிக் குற்ற விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அமிஹிசாம் கூறினார்.
தெளிவற்ற முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் தனிநபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், அவற்றின் நம்பகத்தன்மையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சரிபார்க்கவும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
எந்தவொரு மோசடி நடவடிக்கையும் CCID மோசடி பதில் மையத்திற்கு 03-26101559 அல்லது 03-26101599 என்ற எண்ணில் தெரிவிக்குமாறும் அமிஹிசாம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
-பெர்னாமா




















