இருமொழிக் கொள்கையே நம் கல்விமுறையின் அடிக்கல்: சிங்கை கல்வி அமைச்சர்

தாய்மொழி கற்றல் அனுபவத்தை வகுப்பறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மேம்படுத்தும் நோக்கில் அடுத்த ஆண்டு முதல் தொடக்கநிலை 1 மாணவர்களுக்குப் புதிய தாய்மொழிப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

“21ஆம் நூற்றாண்டின் திறன்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் பாடத்திட்டத்தில் கண்வழி, செவிவழி, இயக்கவழி போன்ற பல்வேறு கற்றல் நடைமுறைகள் பின்பற்றப்படும்,” என்றும் ‘தாய்மொழிகளின் கருத்தரங்கு 2023’ நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் கூறினார்.

புதிய பாடத்திட்டத்தின் சிறப்பம்சமாக, தமிழ்மொழி கற்றலில் ‘ஒலிக்கோல்’ எனும் புதிய தமிழ் மின்னணு வாசிப்புக்கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் சான் தெரிவித்தார்.

தமிழ் எழுத்து, சொல் அட்டைகளுடன் இணைந்து வரும் இந்த ஒலிக்கோலை அந்த அட்டைகளின்மீது வைக்கும்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்து அல்லது சொல்லை ஒலிக்கோல் வாசிக்கும். மாணவர்கள் சரியாக எழுத்து கூட்டி வாசிக்கவும் முறையாக உச்சரிக்கவும் அக்கருவி உதவும் என்றும் அவர் சொன்னார்.

மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும், சுயகற்றலை மேம்படுத்தும் தொழில்நுட்பக்கூறுகள் அதிக அளவில் இந்தப் பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

எடுத்துக்காட்டாக, சரியான உச்சரிப்பிற்கு, சொற்களைக் கூறும்போது நா எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற உயிரோவியக் காணொளிகளும் இப்பாடத்திட்டத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் விளக்கினார்.

இதுமட்டுமல்லாது, பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பேச்சுத்திறனை மெருகேற்ற, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப தீர்வுகளை உருக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தாய்மொழிக் கலாசாரத்தை வலியுறுத்தும் இப்பாடத்திட்டம், மாணவர்களிடையே பிற கலாசாரக் கூறுகள் பற்றிய புரிதலையும் மேம்படுத்தும் என்றார் சான்.

“ஒருவருக்கு இளவயதில் ஏற்படும் தாய்மொழிப் புழக்கமே எதிர்காலத்தில் அவரின் மொழிப்புலமையைத் தீர்மானிக்கிறது. ஆகவே, அதில் நாம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்,” என்ற அமைச்சர், பெற்றோர்களும் பிள்ளைகளுக்குத் தாய்மொழியை கற்பிக்க முனையுமாறு கேட்டுக்கொண்டார்.

பிற இனத்தவருடன் உரையாட ஆங்கில மொழி தேவைப்பட்டாலும் நம் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தாய்மொழியால்தான் வேரூன்ற முடியும் என்று அமைச்சர் சான் சொன்னார்.

உலகளவில் சிங்கப்பூர்க் கடப்பிதழ் செல்வாக்குமிக்கதாக விளங்குவதுபோல இருமொழிக் கொள்கைதான் நம் பாரம்பரியத்தின் கடப்பிதழ் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இருமொழிகளில் பேசவும் அவற்றைப் புரிந்துகொள்வதற்குமான திறன், நம் மரபுடனான பிணைப்பை வலுப்படுத்துவதோடு உலகளவில் நம் தொடர்புகளையும் மேம்படுத்துகிறது. அத்திறனே நம் அடையாளத்தை வடிவமைக்கிறது,” என்றார் சான்.

தொடர்ந்து 12ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை ‘நம் மொழிகளின் அதிசய உலகில் திளைத்திருப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணியளவில் நடந்த தொடக்க விழாவில் சிறப்பாகச் செயலாற்றிவரும் தமிழ், மலாய், சீன மொழி ஆசிரியர்கள் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

இதில் சிறந்த பாலர்பள்ளி தாய்மொழி ஆசிரியருக்கான விருதைப் பெற்றார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியராக இருக்கும் சங்கீதா வேல்முருகன், 43.

“மழலையர்க்குத் தமிழ் கற்றுத்தருவது சவாலான ஒன்று. அவர்களின் கவனம் சிதறாமல் ஆர்வத்தை ஈர்க்கும் பாட நடைமுறைகளை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து உற்சாகமாகச் செயல்பட இவ்விருது மிகுந்த ஊக்கமளிக்கிறது,” என்றார் சங்கீதா.

அதே பிரிவில் விருதுபெற்ற மற்றொரு தமிழாசிரியரான கவிதா ராமச்சந்திரன், 39, “ஒவ்வொரு நாளும் பணிக்குச் செல்வதே விருது பெறுவதைப் போன்றதுதான். பாலர் பள்ளியில் தாய்மொழியை மாணவர்களின் மனத்தில் புகுத்துவது பொறுப்புமிக்க பணி. அதனை நான் செவ்வனே செய்து வருகிறேன் என்பதற்கு இவ்விருதே சான்று,” என்று மகிழ்வுடன் கூறினார்.

கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகள், நிறுவனங்கள், அமைப்புகளின் தாய்மொழி சார்ந்த 45 கண்காட்சிக் கூடங்கள் இடம்பெற்றன. அத்துடன், 45 பகிர்வங்கங்களும் பயிலரங்குகளும் நடைபெற்றன.

மொழிசார் மரபுடைமை விளையாட்டுகள், பெற்றோருடன் இணைந்து புத்தகம் படித்தல், ஊடகத்துறையில் பேசுவதற்கான பயிற்சி, கதை சொல்லுதல், வண்ணம் தீட்டுதல், வண்ணப்பொடிகளைக் கொண்டு வைத்து ஓவியம் வரைதல், சிதறுண்ட படத்துண்டுகளை சரியாக அடுக்குதல், மருதாணியிடுதல், சொல் விளையாட்டு, புதிர்ப்போட்டி போன்ற பல களிநயமான நிகழ்வுகள் கருத்தரங்கில் இடம்பெற்றன.

இவற்றுடன் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சிங்கப்பூரில் இருமொழிக்கல்வியின் பயணம் குறித்த தகவல்களும் காணொளி வாயிலாக ஒரு கூடத்தில் விளக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் ராஜி ஸ்ரீகாந்த், 37, தம் கணவர், எட்டு வயது மகன், ஐந்து வயது மகளுடன் கண்காட்சிக்கு வந்திருந்தார்.

“வீட்டில் தமிழ் பேசினாலும்கூட பிள்ளைகளுக்கு அதிகமான ஆங்கிலப் புழக்கமே இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அதிகம் செல்வோம். எளிமையான முறையில் மொழியினைக் கற்றுக்கொடுக்கும் பல விளையாட்டுகளை பிள்ளைகள் மகிழ்வுடன் விளையாடினர்,” என்று கூறினார் ராஜி.

தன் மனைவியுடனும் ஆறு வயது மகளுடனும் வந்திருந்த பொறியாளர் வேணுகோபால், 40, “பொருள்களையும் சொற்களையும் இணைத்தல், தேடிக் கண்டுபிடித்தல் போன்ற விளையாட்டுகள் என் மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிதாக நிறைய சொற்களை அவள் கற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here