வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு நான்கு நிலைகளை உள்ளடக்கிய கடுமையான எஸ்ஓபியை பின்பற்ற வேண்டும் என்கிறார் மனிதவள அமைச்சர்

புத்ராஜெயா, டிசம்பர் 16 :

கோவிட்-19 பரவும் அபாயத்தைத் தடுக்க, வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கும் போது, நான்கு நிலைகளை உள்ளடக்கிய மிகக் கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மலேசியா தயார் செய்துள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அந்நியத்தொழிலாளர்கள் புறப்படுவதற்கு முன், வருகை, வந்த பின் (தனிமைப்படுத்தப்பட்ட காலம்) மற்றும் தனிமைப்படுத்தலுக்குப் பிந்தைய காலம் என நான்கு நிலைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், அவர்கள் பிறந்த நாட்டில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்றும், சிறப்புப் பாதையைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தொழிலாளர்கள், அந்தந்த பணியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், சான்றளிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் மற்றும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச வீட்டுவசதி மற்றும் வசதிகள் சட்டம் 1990 (சட்டம் 446) இன் கீழ் தேவைப்படும் வசதியான தங்குமிடத்தை முதலாளிகள் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் மலேசியாவிற்குள் வந்த பின்னர், தொழிலாளர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் அந்தந்த பணியிடங்களுக்கு மாற்றப்படுவதற்கு முன் முதல், மூன்றாவது, ஐந்தாவது மற்றும் ஏழாவது நாளில் RT-PCR கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சரவணன் கூறினார்.

இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி மேலாண்மை நிபுணத்துவ (சிடிஎம்பி) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நாட்டிற்குள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக நுழைவதை உறுதி செய்வதில் இந்த நான்கு நிலைகளும் முக்கியமானவை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here