வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களால் உணவுக்காக சூறையாடப்படும் கடைகள் !

ஷா ஆலம், டிசம்பர் 20 :

“பசி வந்தால் பத்தும் பறக்கும்” இந்த பழமொழியை உண்மையாக்கும் விதமாக, இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நடந்த சம்பவம் இருக்கிறது.

அக் குடியிருப்புப் பகுதி திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் என்று நம்பப்படும் ஒரு பெரிய கூட்டம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ள பல மளிகைக்கடைகளின் சங்கிலிகளை உடைத்து, பொருட்களை சூறையாடியுள்ளனர்.

இப்பகுதியில் சுமார் 3 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அவ் வெள்ளத்தால் கடைகளும் பாதிக்கப்பட்டன.

அந்த கும்பல் கடைகளின் இரும்பு ஷட்டர்களை உடைத்து, முக்கியமாக உணவு பொருட்களை வண்டியில் கொண்டு சென்றது.

வெள்ள நீரில் தங்களின் வீடுகள் மூழ்கியதால், அதிகாரிகளிடமிருந்து உணவு உதவி கிடைக்கவில்லை எனக் கூறி அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ACP பஹுரூடின் மட் தைப் இதுபற்றிக் கூறுகையில், வெள்ளம் பாதித்த பகுதியில் மைடின் மார்ட், கேகே சூப்பர் மார்ட், 7-11 மற்றும் பிற மளிகைக் கடைகளில் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை பல உடைப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.

இவ்வாறு மக்கள் கொள்ளையடிப்பதாக தகவல் கசிந்ததால், பாதிக்கப்பட்ட கடைகளுக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

“இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. நாங்கள் எங்கள் பணியாளர்களை அங்கு நிறுத்தியுள்ளோம், மேலும் அப்பகுதியில் குற்றங்களைத் தடுக்க பொது நடவடிக்கைப் படையின் (ஜிஓஎஃப்) உதவியை நாடியுள்ளோம்” என்று பஹாருடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து போலீசார் இன்னும் எந்த ஒரு அறிக்கையையும் பெறவில்லை என்றார்.

மேலும், கடை உரிமையாளர்கள் முன் வந்து காவல்துறையில் புகார் அளிக்குமாறு பஹாருடின் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here