புத்ராஜெயா, டிசம்பர் 22 :
புக்கிட் அமான் (மத்திய காவல்துறை) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ரஸாருடின் ஹுசைன் @ அப்துல் ரசித், மலேசிய காவல்துறையின் புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 25 அன்று, தற்போது தேசிய காவல்துறை துணை தலைவராக பணியாற்றி, ஓய்வு பெறவுள்ள டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிமுக்கு பதிலாக 58 வயதான ரஸாருடின் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இந்த நியமனம் டிசம்பர் 26 முதல் நடைமுறைக்கு வருகிறது.
காவல்துறை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், இந்த நியமனம் தொடர்பில் மேன்மை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலைப் பெற்றதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
இந்த நியமனம் கூட்டாட்சி அரசியலமைப்பின் 140வது சரத்து 4 மற்றும் 5 க்கு இணங்க உள்ளது என இன்று ரஸாருடினிடம் நியமனக் கடிதத்தை வழங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.





















