‘விடிஎல்’ இன் கீழ் சிங்கப்பூர் – ஜோகூர் பாருவுக்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது; ‘காஸ்வே லிங்க்’ நிறுவனம் தகவல்

தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதையின்கீழ் (விடிஎல்) ஜனவரி மாதம் கடைசி 10 நாள்களில் சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் பாருவுக்குச் செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ‘காஸ்வே லிங்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனப் புத்தாண்டிற்கு முன்பு நாடு திரும்பிவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் மலேசியர்கள் அவசர அவசரமாக பயணச்சீட்டுகளை வாங்கியதே அதற்குக் காரணம்.

ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, ஜனவரி 20ஆம் தேதிவரை பேருந்துப் பயணச்சீட்டு விற்பனை நிறுத்திவைக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் புதன்கிழமை (டிசம்பர் 22) அறிவித்து இருந்தது.

மலேசியா திரும்புவதற்கான பயண ஏற்பாடுகளை இன்னும் செய்யாதோர், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பயணச்சீட்டுகளை அவசர அவசரமாக வாங்கினர்.

இதனால், ஜனவரி 21க்கும் 31க்கும் இடையே சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்வதற்கான பயணச்சீட்டுகள் ஒரு சில மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்ததாக காஸ்வே லிங்க் நிறுவனம் கூறியுள்ளது.

அதே 10 நாள் காலகட்டத்தில், ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான பயணச்சீட்டுகள் இன்னும் கிடைப்பதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சீனப் புத்தாண்டின் முதல் நாள் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரின் காஸ்வே லிங்க், டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனங்களைப் பொறுத்தவரை, சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் பாருவிற்குச் செல்வதற்கான தேவையே அதிகம் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here