கோத்த கினபாலு: 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் கிறிஸ்துமஸ் பயணம் இன்று லோரியுடன் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததில் சோகத்தில் முடிந்தது.
மதியம் 2 மணியளவில் ஜாலான் கிமானிஸ்-கெனிங்காவ் பகுதியில் இந்த விபத்து நேர்ந்தபோது, குடும்பம் கெனிங்காவ் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தது.
இறந்தவர்கள் டெனி ரிஸ்லின் வில்லியம் (36) மற்றும் அவரது ஒன்பது வயது மகள் டாப்னே டேல் என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) மிஸ்ரன் பிசாரா தெரிவித்தார்.
பிற்பகல் 2.14 மணியளவில் ஒரு பேரிடர் அழைப்பைத் தொடர்ந்து மீட்புக் குழு உடனடியாக அனுப்பப்பட்டது என்றார். மேலும் சம்பவ இடத்தில் இருந்த துணை மருத்துவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
வாகனத்தில் இருந்த மற்ற மூன்று குடும்ப உறுப்பினர்களான வில்லியம் பாரு என்கிலோ 61, டேரிலின் சிலாப் 13, மற்றும் டேனிலா டேல் 6, ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 43 வயதான லோரி ஓட்டுநர் காயங்களுக்கு உள்ளானார் என்று மிஸ்ரான் மேலும் கூறினார்.





















