கோலாலம்பூர், டிச. 25-
மலேசிய மக்கள் மத்தியில் புகைப்படத் திறனை ஊக்குவிக்கும் வகையில் Tourism Malaysia புகைப்படப் போட்டியை நடத்துகின்றது. உள்நாட்டு சுற்றுலாத்துறையை மிளிரச் செய்யும் வகையிலான இந்தPhoto Challenge 2021 போட்டி 80,000 ரிங்கிட் வரையில் பரிசுகளை வழங்குகின்றது.
குறிப்பாக புகைப்படக் கலை தளவாடங்கள் மட்டுமன்றி சுற்றுலாத் திட்டமும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியின் அறிமுக விழா Jom Cuti – Cuti Malaysia திட்டத்தின் ஒருங்கிணைப்பில் அண்மையில் செத்தியாவங்சாவிலுள்ள பேரங்காடி ஒன்றில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் Tourism Malaysia குழுமத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ஸைனுடின் அப்துல் வஹாப் கலந்துகொண்டு இந்தப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.
இந்நிலையில் இந்தப் புகைப்படப் போட்டி இவ்வாண்டு டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு நடைபெறும்.
18 வயதிற்கு மேற்பட்ட மலேசியர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இதில் தீவிரப் புகைப்படம், இயற்கை வள சுற்றுச்சுழல், கலை – கலாச்சாரம், மனித ஆர்வம், அப்பொழுதும் – இப்பொழுதும் என 4 பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் போட்டிக்கு எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாத நிலையில் அதில் பங்கேற்பவர்கள் புகைப்படம் எடுக்க எந்த வகை புகைப்படக் கருவியும் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ ஸைனுடின் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறைக்கு மிக நெருக்கமான கலையாகப் புகைப்படக் கலை விளங்குகின்றது. இக்கண்கவர் புகைப்படங்கள் மூலம் பொதுமக்கள் மலேசியாவில் சுற்றுலா மேற்கொண்டு தங்கள் விடுமுறையைக் கழிக்க ஊக்குவிக்க முடியும்.
இது தவிர மலேசியர்கள் மத்தியில் புகைப்படத் திறனை வெளிக்கொணரவும் அவர்களிடம் உள்ள புத்தாக்க ஆர்வத்தை மிளிரச் செய்யவும் இந்தப் போட்டி ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
இந்தப் போட்டி குறித்த மேல் விவரங்களும் அதில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பாரத்தையும் பொதுமக்கள் Tourism Malaysia அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பெறலாம். (www.malaysia.travel.)