மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா

மரபணு மாற்றம் அடைந்து பரவி வரும் டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று, இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உத்தவ் தாக்கரே அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அம்மாநில அமைச்சர்கள் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களம் வருகின்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா அமைச்சர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய மகராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

சோதனையின் முடிவில் 10 அமைச்சர்களுக்கும் 20 எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அஜித் பவார், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடரந்து பேசிய அவர், மகாராஷ்டிராவில் கோவிட் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அரசு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிவது கட்டாயம். இதனை உறுதிபட கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 454 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here