அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு – இந்தியா எரிசக்தி துறையில் புதிய மைல்கல்

புதுடெல்லி:

இந்தியாவின் ஆழ்கடல் ஆய்விற்கு பெரிய ஊக்கமாக, அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் நாட்டிற்கு அதிக செலவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை குறைப்பதற்காக, நாட்டின் கடல்சார் பகுதிகளில் இயற்கை எரிவாயு இருப்புகளைத் தேடும் பணிகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கான முயற்சியை வலியுறுத்தி வருகிறார்.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்தமான் தீவுகளில் உள்ள ஸ்ரீ விஜயபுரம்-2 எண்ணெய்க் கிணற்றிற்கு அருகே, சுமார் 17 கி.மீ. தூரத்தில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“அந்தமான் கடல் நமக்கு ஏராளமான எரிசக்தி வளங்களை அள்ளித் தந்துள்ளது,” என்று அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“அந்தமான் கடல் பகுதியில் 7,257 அடி முதல் 7,382 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட உற்பத்தி பரிசோதனைகளில் இயற்கை எரிவாயு கொட்டிக் கிடப்பது உறுதியாகியுள்ளது. மாதிரிகள் கப்பல் மூலம் ஆந்திராவின் காக்கிநாடாவிற்கு கொண்டு வரப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், 87% அளவுக்கு மீத்தேன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”

மேலும், எரிவாயு இருப்பின் அளவு மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டு சாத்தியக்கூறுகள் அடுத்த மாதங்களில் தெளிவாகும் என்றும், “இது நமது தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் மிக முக்கியமான மைல்கல்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here