கோலாலம்பூர், ஜனவரி 5:
சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒன்பது பகுதிகளில் உள்ள பயனீட்டாளர்களின், 2022 ஜனவரி மாத தண்ணீர் கட்டணத்தை (கட்டணக் குறியீடு 10) தள்ளுபடி செய்வதாக Pengurusan Air Selangor Sdn Bhd (Air Selangor) தெரிவித்துள்ளது.
ஆயர் சிலாங்கூர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பில் கட்டண விலக்குக்கு தகுதியான பகுதிகளாக கம்போங் பாசீர், ஜாலான் பத்து பாடா மற்றும் ஜாலான் ரஹ்மத் (WTC KL அருகில்), ஜாலான் ராஜா சூல்லான், கம்போங் சுபடக், கம்போங் டெலிமா, கம்போங் காசிப்பிள்ளை, கம்போங் கொலம் ஆயர், லோரோங் ஜம்புலாட் மற்றும் லோரோங் ராஜா மகாதி ஆகியவை அடங்கும்.
ஆயர் சிலாங்கூரின் கூற்றுப்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பயனீட்டாளர்கள் ஒரு மாத காலத்திற்குத் தானாக இந்த தள்ளுபடியைப் பெறுவார்கள், இதற்காக நீர் பயன்பாட்டு நிறுவனத்திடம் எந்த படிவத்தையும் பூர்த்தி செய்யவோ அல்லது சமர்ப்பிக்கவோ தேவையில்லை.
“இந்த கட்டண விலக்கு காலத்தில், மாதாந்திர தண்ணீர் கட்டணங்கள் ஆயர் சிலாங்கூர் மூலம் வழங்கப்படும். இருப்பினும், தள்ளுபடியைப் பெற தகுதியுடைய பயனீட்டாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை” என்று அது கூறியது.