பந்திங்கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் ஒரு வங்காளதேசி உட்பட 29 போதைப்பித்தர்கள் கைது!

பந்திங், ஜனவரி 6 :

நேற்று, போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் சாராங் நடவடிக்கையின் கீழ், ஒரு வங்காளதேசி உட்பட 29 போதைப்பித்தர்கள் இங்குள்ள ஜெஞ்சரோம், ஸ்ரீ சீடிங், ஜாலான் கிள்ளான் – பந்திங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கைதுசெய்யப்பட்டதாக, கோல லங்காட் காவல்துறைத் தலைவர் அஹமட் ரித்வான் முகமட் நோர் @ சலே கூறினார்.

செம்பனைத் தோட்டத்தில் போதைப்பொருள் கடத்திய ஒரு 30 வயதான ஆடவரை கைது செய்ததைத் தொடர்ந்து, இந்த போதைப்பித்தர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

“போதைப்பொருள் கடத்தியவரை பிடித்த பிறகு, அங்கு வந்த அவரது வாடிக்கையாளர்களைப் பிடிக்க போலீசார் காத்திருந்தனர், அதன் பின்னர் ஒரு வங்காளதேசி உட்பட 28 போதைப்பித்தர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் இன்று ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.

ஆரம்ப போதைப்பொருள் சோதனையில், போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட வேலையில்லாமல் இருக்கும் அனைத்து சந்தேக நபர்களும் ஓபியேட் போதைப்பொருளுக்கு நேர்மறையாக இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் போதைப்பொருள் தொடர்பான கடந்தகால குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, 500 வெள்ளி மதிப்புள்ள 25.4 கிராம் போதைப்பொருளையும் போலீசார் கைப்பற்றினர் மற்றும் போதைப்பொருள் வருமானம் என நம்பப்படும் ரொக்கம் 350 வெள்ளியையும் பறிமுதல் செய்தனர்.

20 மற்றும் 50 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39பி, பிரிவு 12 (2), மற்றும் பிரிவு 15 (1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த செவ்வாயன்று, கோல லங்காட்டில், கடந்த மூன்று மாதங்களில் வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டுகளில் தீவிரமாக ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அக்குழுவினர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாவர். இந்த கொள்ளை கும்பலை கைது செய்ததை தொடர்ந்து பந்திங், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் குறைந்தபட்சம் 10 கொள்ளை வழக்குகள் மற்றும் 10 வழிப்பறி வழக்குகளை தீர்த்து வைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம்” என்று அவர் கூறினார்.

அவர்களுக்கு எதிராக கடந்த குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அனைத்து சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டத்தின் 394 வது பிரிவின் கீழ் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here