ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது

ஜோகூர் பாரு, ஜனவரி 6 :

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 66 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) 1,195 குடும்பங்களைச் சேர்ந்த 4,449 பேர் தங்கியுள்ளனர். இது நேற்றுக் காலை 81 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) 1,430 குடும்பங்களைச் சேர்ந்த 5,399 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று குறைவாக உள்ளது.

மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளோரின் மொத்த எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தாலும், நேற்று முதல் தங்காக் மற்றும் மூவார் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு காணப்படுகிறது.

தங்காக்கில் நேற்றிரவு 16 பிபிஎஸ்ஸில் 177 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 202 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

மேலும் மூவாரில் நேற்றிரவு 4 பிபிஎஸ்ஸில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 333 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 130 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“செகாமாட்டில் இன்று காலை 36 பிபிஎஸ்ஸில் 685 குடும்பங்களைச் சேர்ந்த 2,508 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

“ஏனைய மூன்று மாவட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை. பத்துபகாட்டில் 1 பிபிஎஸ்ஸில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

“குளுவாங்கில் உள்ள ஒரு பிபிஎஸ்ஸில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 128பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மெர்சிங்கில் உள்ள 6 பிபிஎஸ்ஸில் தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123 குடும்பங்களைச் சேர்ந்த 164 பேராகவே உள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு செயலகத்தின் தரவுகளின்படி, இன்று காலை நிலவரப்படி, ஜோகூரில் உள்ள 10 மாவட்டங்களிலும் வெயிலுடன் கூடிய வானிலை காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here