ஈப்போ, ஜனவரி 23 :
நேற்றிரவு, தாப்பாவுக்கு அருகில் உள்ள ஜாலான் ஈப்போ-கோலாலம்பூர் சாலையின் 53ஆவது கிலோமீட்டரில், அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த காரில் மோதி, பள்ளத்தில் தவறி விழுந்ததில் தாப்பா மஇகா பிரிவு துணைத் தலைவர் டி. சிவபாலன் உயிரிழந்தார்.
நள்ளிரவு 12.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், சிவபாலன் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தாப்பா மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
“புரோட்டான் ஈஸ்வரா வகைக் காரை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்ட (சிவபாலன்) எதிர் பாதையில் நுழைந்து, 21 வயதுடைய இளைஞன் ஓட்டிச் சென்ற புரோட்டான் எக்ஸோரா வகைக் காருடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
“அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் கார் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் சாலையின் வலதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், புரோட்டான் எக்ஸோராவின் ஓட்டுநர் அதிஸ்டவசமாக காயமின்றி தப்பித்ததாகவும் வான் அசாருடின் கூறினார்.





















