மூத்த குடிமக்களுக்கான வெ.500 பெறுமதியுள்ள சுகாதார அட்டையை அறிமுகப்படுத்துகிறது பகாங் மாநில அரசு

பகாங், ஜனவரி 18 :

இன்று மூத்த குடிமக்களுக்கான சுகாதார அட்டைத் திட்டத்தை பகாங் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 10 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18,000 பெறுநர்களை உள்ளடக்கியுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார்.

ஒரு நபருக்கு 500 வெள்ளி மதிப்பிலான சுகாதார அட்டைத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றார். முதல் கட்டமாக சமூக நலத்துறையின் முதியோர் உதவித் திட்டத்தில் உள்ள மொத்தம் 9,009 நபர்கள் இன்று தங்கள் சுகாதார அட்டையை பெறுகின்றனர்.

இரண்டாம் கட்டத்தில், மீதமுள்ள பெறுநர்கள் தங்கள் சுகாதார அட்டைகளை இந்தாண்டின் மார்ச் மாதத்தில் பெறுவார்கள்; சுகாதார உதவி தேவைப்படுபவர்கள் என மாவட்ட அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சுகாதார அட்டையைப் பெறுவார்கள்.

“சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள், நியமிக்கப்பட்ட 50 தனியார் கிளினிக்குகளில் பொது நடைமுறைகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம். இதன் மூலம் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதற்கு ஒரு மாற்று வழி கிடைக்கும்,” என்றார்.

இன்று டேவான் ஜூப்லி பேராக் சுல்தான் ஹாஜி அஹமட் ஷாவில் சுகாதார அட்டையை அறிமுகப்படுத்திய பின்னர், நடந்த செய்தியாளர் சந்திப்பில் வான் ரோஸ்டி இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் சலேஹுடின் இஷாக்கும் கலந்து கொண்டிருந்தார்.

வழங்கப்பட்ட தரவுகளின்படி, குவாந்தான் 1,829 பேருடன் அதிக எண்ணிக்கையிலான பெறுநர்களைப் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து டெமெர்லோ (1,408), பெக்கான் (1,347), லிப்பிஸ் (996) மற்றும் பெந்தோங் (762).

பங்கேற்கும் கிளினிக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மூத்த குடிமக்களின் வசதி மற்றும் நலனுக்கான முன்னுரிமையுடன், தேவை மற்றும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் செய்யப்படும் மேம்பாடுகளைப் பொறுத்து, இது இருக்கும் என்று வான் ரோஸ்டி கூறினார்.

“இந்த உதவி எதிர்காலத்தில் தொடரும், மேலும் அதிக மூத்த குடிமக்கள் திட்டத்தில் இருந்து பயன்பெறும் வகையில் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பகாங் 2022 பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றான அனைத்து வயதினருக்கும் அதன் குடியிருப்பாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான, மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த திட்டத்தின் தொடக்கம் நிரூபித்ததாகவும் வான் ரோஸ்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here