லோரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM5.08 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; அறுவர் கைது

கோலாலம்பூர், ஜனவரி 31 :

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மற்ற விநியோகஸ்தர்களுக்கு விநியோகிப்பதற்காக, ஒரு லோரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM5.08 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று டன் எடையுள்ள அந்த லோரியானது மற்ற கடத்தல்காரர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்வதற்கு ஒரு கடையாகவும், சேமிப்புக் கிடங்காகவும், வாகனமாகவும் பயன்படுத்தப்பட்டது.

இந்த போதைப்பொருள் விநியோகக் கும்பலின் மூளையாக அண்டை நாட்டைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

கடந்த வியாழன் அன்று தலைநகர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளில், கோலாலம்பூர் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையால் (JSJN) தந்திரமான முறையில் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு வியட்நாமிய பெண் உட்பட 20 முதல் 42 வயதுடைய 6 பேரை போலீஸ் கைது செய்ததாக கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

“இந்தக் கும்பல் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போதைப்பொருள் விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஹோட்டல்களையும் விடுதிகளையும் தங்களுடைய தங்குமிடங்களாகவும், லோரிகளை போதைப்பொருள்களை சேமித்து வைக்கும் இடங்களாகவும் பயன்படுத்தி வந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

“இந்தச் சோதனையின் விளைவாக, 141 கிலோகிராம் (kg) சியாபு, 0.7 கிராம் ஹெரோயின் மற்றும் நான்கு எராமின் 5 மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் இன்று IPK கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அவர்களில் நால்வருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றவியல் பதிவுகள் இருப்பது தெரியவந்தது.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரணையில் உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் நான்கு முதல் ஏழு நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here