மோசமான காற்றின் தரம் காரணமாக பூலாவ் புரூங் குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை

நிபோங் தெபால், பிப்ரவரி 5 :

இங்குள்ள பூலாவ் புரூங் குப்பைக் கிடங்கில், ஜாலான் பைராமில் ஜனவரி 12 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தற்காலிக நிவாரண மையத்திற்கு (PPS) வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள், ஜனவரி 31 அன்று தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட போதிலும், மோசமான காற்றின் தரம் காரணமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை.

செபெராங் பிறை செலாத்தான் மாவட்ட பேரிடர் குழுவின் (SPS) தலைவர் மார்லியா முகமட் பேலியா இதுபற்றிக் கூறுகையில், குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் காற்று மாசுபாடு இன்னும் இருப்பதால், அவர்களை மீளவும் அப்பகுதிகளுக்கு செல்ல அனுமதிப்பது பாதுகாப்பற்றது என்று கூறினார்.

குடியிருப்பாளர்கள், குறிப்பாக PPS Sekolah Kebangsaan (SK) Saujana Indah இல் தங்கியிருக்கும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டாம் என்று SPS பேரிடர் குழு முடிவு செய்துள்ளதாகவும், மேலும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்ற சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

“குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி வீடு திரும்புவதைப் பற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும் தற்போது, அந்​​நிலப்பரப்பு பகுதி இன்னும் நிலை 1 பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தீ பரவியதும், குப்பை கிடங்கு அருகே வசித்த 90 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டிருந்தனர், ஏனெனில் அவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள காற்று மிக அபாயகரமான புகையால் நிரம்பி இருந்தது.

மாநில சுற்றுச்சூழல் துறை (DOE) இயக்குநர், ஷரிபா ஜக்கியா சையத் சாஹாப் கூறுகையில், அந்தப் பகுதியில் காற்று மாசுக் குறியீடு (API) சிறந்த அளவீடுகளைக் காட்டியது, ஆனால் இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவை எட்டவில்லை, மேலும் வாயு மாசுபாடு இன்னும் அதிகமாக உள்ளது. இதனால் குடியிருப்பாளர்கள் இப்போது வீடு திரும்புவது ஆபத்தானது.

“நாங்கள் அந்தப் பகுதியைச் சுற்றி சில கண்காணிப்புகளைச் செய்தோம், பூலாவ் புரூங்கில் மழை பெய்ததால், காற்றின் தரத்தை அது மேம்படுத்த உதவியது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிக மழை பெய்யும் என்று மெட்மலேசியாவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“எனவே அதிக மழைப்பொழிவு காற்று மற்றும் எரிவாயு மாசுபாட்டை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், இது குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப வழி வகுக்கும். முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் வரை இங்கு கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் தொடரும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here