சிங்கப்பூர், பிப்ரவரி 6 :
சிங்கப்பூரில் ஹெரோயின் விநியோகித்ததாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டதற்காகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியரான கிஷோர் குமார் ரகுவான் (வயது 41) என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சுமார் 900 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் வகைப் போதைப்பொருள் அடங்கிய பையை, விநியோகிப்பதற்காக, சிங்கப்பூர் நாட்டு சீன வம்சாவளியான பங் ஆஹ் கியாங் (61) என்பவரிடம் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக கியாங், கிஷோர் ஆகிய இருவரையும் CNB அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் (பிப்.3) இடம்பெற்ற போது விசாரணையின் போது, தான் எடுத்துவந்தது போதைப்பொருள் என தனக்கு தெரியாது எனவும், அதை கற்கள் என கூறி அதை உரியவரிடம் சேர்க்கும்படி தன்னிடம் கூறப்பட்டதாகவும் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “கியாங், கிஷோர் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து” இந்த வழக்கில் கிஷோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன், கியாங்குக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார்.
15 கிராமுக்கு மேல் ஹெரோயின் கடத்தப்பட்டால் மரண தண்டனை விதிக்க சிங்கப்பூர் சட்டம் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















