வெற்றி பெற்றதும் கூலாய் பகுதியில் மேலும் இரு தமிழ்ப்பள்ளிகள் – புக்கிட் பத்து தேமு வேட்பாளர் சுப்பையா உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தலில் புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியில் நான் வெற்றிபெற்ற பிறகு, இப்பகுதியில் மேலும் இரு புதிய தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என தேசிய முன்னணி வேட்பாளர் சுப்பையா சோலைமுத்து உறுதியளித்தார்.

நான் லாபிஸ் பகுதியில் பிறந்திருந்தாலும் 7 வயது முதல் எனக்கு கூலாய் வட்டாரத்துடன் தொடர்பு உள்ளது. அதிலும் 21 வயது முதல் நான் ம.இ.கா.வில் உறுப்பினராக இருந்து வருகிறேன். அடிப்படை உறுப்பினர் தொடங்கி இளைஞர் பகுதி, கிளை என பல பிரிவுகளில் பொறுப்பு வகித்து வந்துள்ளேன்.

தற்போது கூலாய் தொகுதி ம.இ.கா. தலைவராகவும் தேசிய நிலையில் மத்திய செயலவை உறுப்பினராகவும் பொறுப்பேற்று வருகின்றேன். ஏற்கெனவே 12 ஆண்டுகள் கூலாய் நகராண்மைக் கழக உறுப்பினராகவும் பணியாற்றி வந்துள்ளேன். எனவே இந்த சட்ட மன்றத் தொகுதியின் நிலவரத்தை நான் நன்கு அறிவேன். இத்தொகுதியில் இந்தியர்கள் மட்டுமல்லாது அனைத்து இன மக்களுக்கும் என்னை நன்கு தெரியும் என மக்கள் ஓசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் சுப்பையா குறிப்பிட்டார்.

கடந்த தேர்தல்களில் புக்கிட் பத்து தொகுதியில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து கெராக்கான் கட்சி போட்டியிட்டு வந்தது. ஆனால் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு அக்கட்சி தேசிய முன்னணியிலிருந்து வெளியேறியது.

எனவே இம்முறை அதுவும் முதல் முறையாக இந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ம.இ.கா. விற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பையும் சேவையாற்றும் அம்சத்தையும் கருத்தில் கொண்டுதான் கட்சி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளார் எனவும் சுப்பையா மேலும் தெரிவித்தார்.

கூலாய் தொகுதி ம.இ.கா மக்கள் பணிக்கு என்றுமே முக்கியத்துவம் அளிக்கும். இதற்கு முன்னதாக இத்தொகுதி மக்களுக்கு எங்களால் முடிந்த வரை சேவையை வழங்கியுள்ளோம். இந்நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியினர் வழங்கிய பல வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சியைப் பிடித்த பிறகு அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில் எனவும் சுப்பையா கூறினார்.

இருப்பினும் அச்சமயத்தில் கூட எங்களால் முடிந்த வரை இத்தொகுதி வாழ் மக்களுக்கு சேவைகளை வழங்கி வந்தோம். குறிப்பாக இதற்கு முன்னதாக கூலாய் தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட நில மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து இரு ஆலயங்களுக்கு நிலம் பெற்றுத் தர வழி செய்தோம். அதில் ஓர் ஆலயத்திற்கு நிலப்பட்டா கிடைக்கவும் ஏற்பாடு செய்தோம். மேலும் மின்சுடலை அமைப்பதற்கு 1 ஏக்கர் நிலம் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொண்டோம் என சுப்பையா மஇகா-தேசிய முன்னணியின் சேவைகளைப் பட்டியலிட்டார்.

தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு இணை கட்டடம் நிர்மாணிக்க,செடிக் தரப்பிடமிருந்து 1.8 மில்லியன் ரிங்கிட் மானியம் பெற்றுத் தர ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு அதனை ரத்து செய்தனர் என்றும் சுப்பையா சுட்டிக் காட்டினார்.

இச்சூழ்நிலையில் இந்த சட்டமன்றத் தொகுதி தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இங்கு மேலும் இரு தமிழ்ப்பள்ளிகள் எழுப்புவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். குறிப்பாக பண்டார் புத்ரா பகுதியில் பள்ளி எழுப்ப 6 ஏக்கர் நிலப்பரப்பை அடையாளம் கண்டுள்ளோம். மேலும் செனாய் பகுதியிலும் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி எழுப்பப்படும் என ஜோகூர் இந்தியர் குத்தகையாளர் சங்கத் தலைவருமான அவர் உறுதியளித்தார்.

இத்தொகுதி வாழ் மலாய், சீன சமூக மக்களும் என்னை நன்கு அறிவர். இந்தத் தொகுதியில் சீன வாக்காளர்கள்தாம் அதிகம். குறிப்பாக குத்தகையாளர் என்பதால்
நான் பெரும்பாலும் தினமும் காலை சிற்றுண்டி அருந்துவது சீன – மலாய் சமூகத்தினருடன்தான். இத்தொகுதி வாழ் மக்களின் தேவைகளை நான் நன்கு அறிவேன். தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றால் அந்தத் தேவைகளைப் தவறாது பூர்த்தி செய்வேன் என சுப்பையா உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here