கம்போங் பாசீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், மார்ச் 7 :

இங்குள்ள கம்போங் பாசீரில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 பேர், தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் என்று கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் ஹாங் துவா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவற்றில் இருந்து 16 உறுப்பினர்களுடன் இரண்டு வாகனங்கள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளன.

திடீர் வெள்ளம் தொடர்பாக தலைநகர் முழுவதும் இதுவரை ஒன்பது வழக்குகள் அவரது துறைக்கு கிடைத்ததாக அவர் கூறினார்.

“பெறப்பட்ட வழக்குகளில் சேராஸில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையம் வெள்ளத்தில் மூழ்கியதுடன் அவ்வளாகத்தில் நிலச்சரிவையம் எதிர்நோக்கியது.

“துரிதமாக செயல்பட்டு, நாங்கள் அந்த நர்சரியில் படிக்கும் 40 குழந்தைகளையும், ஆசிரியர்களையும் வெளியே கொண்டு வர முடிந்தது மட்டுமல்லாமல் அப்பகுதியையும் கண்காணித்தோம் ,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் ஜலான் ராஜா போட், கம்போங் சுங்கை பேரிக் மற்றும் கம்போங் பாரு ஆகிய பகுதிகளிலும் மூன்று மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து, தீயணைப்பு படையினர் அங்கிருந்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

“பாதிக்கப்பட்டவர்கள் கிளப் சுல்தான் சுலைமான் கம்போங் பாருவிலுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு (PPS) மாற்றப்பட்டனர். தற்போது அந்த இடங்களில் நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்றார்.

“இது தவிர, ஜலான் கூச்சாய் லாமாவில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு திடீர் வெள்ளம் பதிவாகியுள்ளது, இதில் 12 கார்கள் சிக்கிக்கொண்டன, பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வாகனத்தின் கூரையில் நின்றபோது தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

மேலும், ஜாலான் ஆயிர் கெரோ-ஆயிர் பனாஸ், தாப்பாக், ஜாலான் லெபோ அம்பாங்; தாமன் சாலாக் செலாத்தான்; தாமான் யு-தாண்ட், ஜாலான் அம்பாங் மற்றும் தாமான் ஸ்ரீ பெட்டாலிங் ஆகிய இடங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

மலேசியக் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

“கோலாலம்பூர் நகர மையத்தில் ஆறு பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் வெள்ளத்தில் செல்வதைத் தவிர்க்கவும், மழையின் போது கவனமாக வாகனம் ஓட்டவும்” என்று அவர் தனது டூவிட்டர் கணக்கில் இன்று பதிவேற்றிய ஒரு டூவீட்டில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here