“உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து வாக்களிப்பீர்” ஜோகூர் இந்திய வாக்காளர்களுக்கு ரவின்குமார் வேண்டுகோள்

ஜோகூர், மார்ச் 10:

ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு கள நிலவரம் காண சில தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தபோதுதான் அந்த மாநிலத்தின் விஸ்தீரணத்தையும் பரந்து விரிந்த நிலப்பரப்பையும் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

ம.இ.கா.வின் இளைஞர் பிரிவுத் தலைவரும் மந்திரி பெசாரின் இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரியுமான ரவின்குமார் போட்டியிடும் தெங்காரோ தொகுதியை நோக்கிச் சென்றபோது அந்த அனுபவம் நமக்குக் கிடைத்தது.

தெங்காரோ பகுதிக்குச் செல்வதற்கு ஆயர் ஈத்தாம் சாலை கட்டண முகப்பிடத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலை நெடுஞ்சாலை இல்லை என்றாலும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பானதாகவே நிர்மாணிக் கப்பட்டிருக்கிறது. காட்டுப் பகுதிகள் வழியெங்கும் ஆங்காங்கே குரங்குகள் உலவிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

தெங்காரோ பெல்டா பகுதியில் ரவின்குமார் பிரச்சாரத்தில் இருந்த இடத்தை நாம் சென்றடைந்த போது, அங்கு பெல்டா பிரதேசமும் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதைக் காண முடிந்தது.

தெங்காரோ தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார் ரவின்குமார்.
மலாய் வாக்காளர்கள் நிறைந்த பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, கிடைத்த சிறிய இடைவெளியில் நம்முடன் அமர்ந்து பேசத் தொடங்கினார்.
அவருடனான நேர்காண லின் சில முக்கியப் பகுதிகள்:

புதிய தமிழ்ப் பள்ளியை மெர்சிங்கில் உருவாக்குவேன்

எனது தொகுதியில் சுமார் 600 இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் நெருக்கமுடன் இங்கே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முக்கியக் குறை அருகில் தமிழ்ப்பள்ளி இல்லாதது.

இதற்காக முயற்சி எடுத்து மெர்சிங்கில் தமிழ்ப்பள்ளிக் கான நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அங்கு தமிழ்ப்பள்ளி ஒன்று எழும். அதன்மூலம் எனது தொகுதி வாக்காளர்கள் மட்டுமன்றி மெர்சிங் வட்டார இந்தியர்களும் பயன் அடைவர். மேலும் தனியார் நிலத்திலிருந்த இங்குள்ள இந்து ஆலயத்திற்கு அவர்களுக்கென பதிவு பெற்ற நிலம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

தெங்காரோ – விவசாயமும் சுற்றுப்பயணமும்
முக்கிய இலக்குகள்

எனது தெங்காரோ தொகுதி இரண்டு இலக்குகளுடன் மாநில அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று விவசாயம், மற்றொன்று சுற்றுப் பயணத் துறை. எனது தொகுதியில் மூன்று தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகளில் 5 வாக்களிப்பு மையங்கள் இருக்கின்றன. இந்தத் தீவுகளை சுற்றுப்பயண மையங்களாக மேம்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக நமது இந்திய இளைஞர்கள் சுற்றுப்பயணத்துறை தொடர்பான கைத்தொழில்களைக் கற்றுக் கொள்ள நான் ஊக்குவித்து வருவதோடு அதற்கான திட்டங்களையும் வகுத்திருக்கின்றேன். அதேபோல விவசாயத் துறையிலும் இளைஞர்கள் பங்கு பெற நான் அவர்களுக்கென திட்டங்கள் வைத்திருக்கின்றேன்.

இங்கு மிகப் பெரிய அளவிலான பால்பண்ணை ஒன்று நிறுவப்படவிருக்கிறது. இதன்மூலம் ஏற்கெனவே மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருப்போர் தங்களின் பால் விநியோகத்தை சுலபமாக மேற்கொள்ள முடியும்.

இந்தத் தொகுதியின் பெரும்பாலான வாக்காளர்கள் மலாய்க்காரர்கள். எனது கடந்த காலச் சேவைகளின் மூலம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றியிருக்கிறேன். அதன் மூலம் அவர்களின் ஆதரவும் வாக்குகளும் எனக்கு மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ஜோகூர் இந்தியர்களுக்கான திட்டங்கள் – சலுகைகள்

நான் ஜோகூர் மந்திரி பெசாரின் இந்தியர் பிரிவுக்கான சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவதால் மாநில அளவில் இந்திய சமூகத்திற்கான நலன்களையும் கண்காணித்து உறுதி செய்திருக்கின்றேன்.

அண்மையில் ம.இ.கா. இளைஞர் பிரிவின் சார்பாக நடத்தப்பட்ட ஜோகூர் பணிப்படைத் தொடக்க விழாவில் ஒவ்வொரு மாவட்ட மன்றத்திலும் ஐந்து இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என அறிவித்தோம். அதனை மந்திரி பெசாரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜோகூர் மாநிலத்தில் இயங்கும் யாயாசான் சுல்தானா ரொஹாயா அறநிறுவனத்தின் மூலம் பல இந்தியர்களுக்கு கல்வி, சமூக நல உதவிகளைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
வீடமைப்புத் திட்டங்களில் இந்தியர்களுக்காக பத்து விழுக்காடு ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்து வருகிறோம். அதற்கு மந்திரி பெசாரும் ஆவன செய்வதாக உறுதியளித் திருக்கிறார்.

கல்வித்துறையிலும் இந்தியர்கள் மேம்பாடு காண நாங்கள் பல வழிகளில் உதவி வருகிறோம். மாநில அரசாங்கத்தின் இந்திய சமூகத்திற்கான நடவடிக்கைக் குழுவுக்கு மந்திரி பெசாரே தலைமையேற்றிருக்கிறார். இதனால் பல பிரச்சினைகளுக்கு எங்களால் நேரடியாகத் தீர்வு காண முடிந்திருக்கிறது.

ஜோகூர் இந்திய வாக்காளர்களுக்கு அன்பு வேண்டுகோள்

இந்த முறை ஜோகூர் மாநிலத்தில், பரவலாக வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கே ஆதரவாக நிலைப்பாடு எடுத்திருப்பதைக் காண முடிகிறது.

இந்திய வாக்காளர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றேன். நீங்கள் வாக்களிக்கச் செல்லும் முன்னால் ஓர் ஐந்து நிமிடம் பொறுமையாக சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். அந்த ஐந்து நிமிடச் சிந்தனை மூலம் உங்களின் அடுத்த ஐந்தாண்டு பாதுகாப்பாகவும் பயனானதாகவும் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய முடியும்.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் அளித்த செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை நம்பி மீண்டும் ஏமாந்துவிடாதீர்கள். உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரத்திலோ வெறுப்பிலோ வாக்களிக்கும் முடிவை எடுத்துவிடாதீர்கள்.

மாறாக, நன்கு சிந்தித்து எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களியுங்கள். தேசிய முன்னணி அரசாங்கம் ஜோகூர் மாநிலத்தை மீண்டும் சிறப்பான வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

அதில் இந்திய சமூகமும் விடுபட்டு விடாமல் பயன்பெற வேண்டும். இந்திய சமூகத்திற்கு உதவத் தயாராக இருக்கும் மாநில மந்திரி பெசார், தேசிய முன்னணி மீண்டும் மாநில அரசாங்கத்தை வழி நடத்த இந்திய சமூகம் ஆதரவு தரவேண்டும், வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here