ஜார்ஜ் டவுன் அருகே உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா என்ற இடத்தில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற நான்கு மாத கர்ப்பிணி பெண் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) காலை 9 மணியளவில் நடந்ததாக பாலேக் புலாவ் OCPD துணைத் தலைவர் கமருல் ரிசல் ஜெனல் தெரிவித்தார்.
மரணமடைந்த 22 வயது பெண்மணியும் 51 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் தெலுக் கும்பாரில் இருந்து பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு (PIA) பயணம் செய்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் சாலையில் நேராக நகர்ந்து கொண்டிருந்த போது, அது திடீரென வலது பக்கம் திரும்பி அதே திசையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது மோதியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் வந்த துணை மருத்துவக் குழுவால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்தில் முகத்தில் காயம் அடைந்தார் என்று கமருல் கூறினார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் மோட்டார் சைக்கிளின் சாலை வரி காலாவதியாகிவிட்டதாகவும் கமருல் கூறினார். சம்பவத்தின் போது வாகனத்தின் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.










