கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் பாதையில் தனது காரை ஓட்டிச் சென்ற 30 வயதுடைய வாகனமோட்டி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை (மார்ச் 18) மதியம் 2.41 மணியளவில் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளியை போலீசார் கண்டுபிடித்ததாக நகர போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் உதவியாளர் ஶ்ரீபுதீன் முகமது சலே கூறினார்.
இந்த காணொளி டேஷ்கேம் உரிமையாளர்கள் மலேசியா முகநூல் பக்கத்தில் முகநூல் பயனாளர் மஸ்லி அலியாஸ் பதிவேற்றியதாக அவர் கூறினார். விஸ்மா சிஐஎம்பி, ஜாலான் பந்தாய் பாருவிற்கு அருகிலுள்ள கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எங்கள் விசாரணைகள் காட்டுகின்றன என்று ஏசிபி ஶ்ரீபுதீன் சனிக்கிழமை (மார்ச் 19) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வரும்படி கேட்டு ஓட்டுநர கைது செய்ததாக ஏசிபி ஶ்ரீபுதீன் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 42(1)ன் கீழ் கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக வழக்கை வகைப்படுத்தியுள்ளோம் என்றார். ஒரு நிமிடம் 11 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மோட்டார் சைக்கிள் பாதையில் ஓட்டிச் சென்றபோது எடுத்ததாக நம்பப்படுகிறது. வீடியோவில் சுமார் 15 வினாடிகள், ஒரு வெள்ளை கார் மோட்டார் சைக்கிள் பாதையில் செல்வதைக் காணலாம்.