ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் குறித்து கிண்டலாக பேசிய தொகுப்பாளர் கிறிஸ் ராக் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் பளார் என அறைந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பின்னர் தன் செயலுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் வில் ஸ்மித். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா கேஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் மொட்டை அடித்தது போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டது தொடர்பாக கிண்டல் செய்துள்ளார். இதற்கு வில் ஸ்மித்தும் சிரித்தபடி இருந்தார். திடீரென மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.