“ஜனநாயகன்” போல் “கருப்பு” படமும் இணையத்தில் கசிய வாய்ப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளை இன்று காலை திரையிட தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியிருந்தது. இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்க முடியாத காரணங்களால் ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் இன்று வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கருப்பு’ திரைப்படத்தை கியூப் நிறுவனம் மற்ற மாநிலங்களில் வெளியிட்டது. ‘கருப்பு’ திரைப்படம் இன்று மாலை வெளியாகும் என்று இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போதைய நிலவரப்படி ‘கருப்பு’ திரைப்படம் இன்று மாலை வெளியாக எந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பல திரையரங்கங்கள் மாலை 6 மணிக்காட்சிக்கான டிக்கெட்களை ரத்து செய்ய ஆரம்பித்துவிட்டதால், கருப்பு இன்று வெளியாகாது என்றே தெரிகிறது. பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் நாளை (மே. 15) இப்படம் வெளியாகலாம். நாளைக்கான டிக்கெட் முன்பதிவுகளும் துவங்கியுள்ளதால் ரசிகர்களும் நம்பிக்கையாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சிவா, தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்துள்ளார்கள். அதில் “கருப்பு படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அனுமதியின்றி வெளியாகியுள்ளது. தவறு நடந்ததை கியூப் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ஜனநாயகன் போல் கருப்பு படமும் இணையத்தில் கசிய வாய்ப்பு. நஷ்ட ஈடு கொடுப்பதாக கியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here