பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..! ஐவரைக் காணவில்லை

ரியோ டி ஜெனீரோ, ஏப்ரல் 4:

பிரேசில் நாட்டில் அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த கனமழையினால், ரியோ டி ஜெனீரோ மாகாணத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த வெள்ளத்துக்கு அங்கு 14 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். 5 பேரைக் காணவில்லை. இனி வரும் நாட்களில் இந்தப்பகுதியில் இன்னும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்துக்கு பலியானவர்களில் ஒரு தாயும், அவரது 6 குழந்தைகளும் அடங்குவார்கள். நிலச்சரிவில் அவர்களின் வீடு மண்ணோடு புதைந்து அடித்துச்செல்லப்பட்டு விட்டது. ஏழாவது குழந்தை மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியோ டி ஜெனீரோ உள்பட பல நகரங்களில் தெருக்கள் ஆறுகளாக மாறி உள்ளன. ரியோ டி ஜெனீரோவின் புறநகரான பெல்போர்டு ரோக்சோவில் தெருக்களில், சிறிய முதலைகள் நீந்திச்செல்லும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிர வைத்துள்ளனர்.

நோவா இகுவாகு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிக்காக ராணுவ ஹெலிகாப்டர்களை அரசு அனுப்பி வைத்துள்ளதாக, அந்த நாட்டின் அதிபரான ஜெயிர் போல் சொனரோ தெரிவித்துள்ளார்.

கடந்த 6 வாரங்களுக்கு முன்பாக, பிரேசிலிய பேரரசின் தலைநகராக விளங்கிய பெட்ரோபொலிஸ் நகரில் பலத்த மழை, நிலச்சரிவுகளில் 233 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here