சகோதரிக்கு ஒயின் வாங்கிக் கொடுக்க நினைத்து ரூ.4.80 லட்சத்தை இழந்த பெண்

ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருள்கள் வாங்குவது இப்போது ஒரு பேஷனாகிவிட்டது. எந்தப்பொருளாக இருந்தாலும் உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. அவ்வாறு ஆன்லைன் ஆர்டர்களைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் சிலர் தங்களது வேலையைக் காட்டி விடுகின்றனர்.

மும்பை பவாய் பகுதியில் வசிக்கும் 32 வயது பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரது வீட்டிற்கு அவர் சகோதரி வந்திருந்திருக்கிறார். அதனால், தன் சகோதரிக்குப் பார்ட்டி வைக்க நினைத்த அந்தப் பெண், ஆன்லைனில் ஒயின் ஆர்டர் செய்ய நினைத்தார்.

இதற்காக ஆன்லைனில் தேடியபோது, ஒரு கடை இருந்ததைப் பார்த்தவர், உடனடியாக அந்தக் கடையின் போன் நம்பருக்கு போன் செய்து, ஒயின் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பணத்தை முன்கூட்டியே அனுப்பினால்தான் ஒயின் அனுப்ப முடியும் என்று கடைக்காரர் தெரிவித்திருக்கிறார். உடனே அந்தப் பெண் ஒயின் வாங்கத் தேவையான ரூ.650-ஐ கூகுள் பே மூலம் அனுப்பிவைத்தார்.

உடனே கடை ஊழியர், மேடம் நீங்கள் கூடுதலாக 30 ரூபாய் அனுப்பிவிட்டீர்கள். அதனை நாங்கள் திருப்பி அனுப்பவேண்டும். எனவே நாங்கள் அனுப்பும் கியூ ஆரை ஸ்கேன் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்திருக்கிறார். அதையடுத்து, அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 19,991 ரூபாய் எடுக்கப்பட்டது. உடனே அந்தப் பெண் மீண்டும் கடைக்கு போன் செய்தபோது கடை ஊழியர் தவறுதலாகிவிட்டது. எனவே மீண்டும் கியூ ஆர் கோடு அனுப்புகிறேன். அதனை ஸ்கேன் செய்தால் பணம் திரும்ப வந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பெண்ணும் அதே போன்று செய்தார். ஆனால் இந்தமுறை 96 ஆயிரம் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்ததில் அந்தப் பெண் ரூ.4.80 லட்சத்தை இழந்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here