கிள்ளான், ஏப்ரல் 25 :
இங்குள்ள செக்கோலா அகமா மெனெங்கா திங்கி (SAMT) சுல்தான் ஹிஷாமுடின் பள்ளி விடுதியில் தீப்பிடித்ததில் மொத்தம் 43 மாணவர்கள் உயிர் தப்பினர்.
நேற்றிரவு 9.30 மணியளவில் தாராவீஹ் தொழுகைக்காக, விடுதியில் தங்கியிருந்த அனைவரும் வெளியே சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தமக்கு இரவு 9.40 மணியளவில் அவசர அழைப்பு வந்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு இயக்குநர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.
இந்த தீயணைப்பு நடவடிக்கையில் காப்பார், கோத்தா அங்கேரிக், ஷா ஆலாம் மற்றும் சுபாங் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் உட்பட 29 பேர் கொண்ட குழு இணைந்ததாக அவர் கூறினார்.
தங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. எங்கள் பணியாளர்கள் சில இயந்திரங்களுடன் உடனடியாக பொங்கி எழுந்த தீயை அணைத்தனர், இருப்பினும் விடுதியின் 70 விழுக்காடு தீயில் எரிந்து நாசமானது, ”என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்றிரவு 10.09 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் நோராஸாம் விளக்கமளித்தார்.
சம்பவத்திற்கான சரியான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.