கோலாலம்பூர்,
MyKiosk திட்டம் தொடர்பில் அவதூறுகளையும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் பரப்பிய தரப்பினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் நேற்று வலியுறுத்தினார்.
சிறு வணிகர்களுக்கு உதவ அமல்படுத்தப்பட்ட MyKiosk திட்டத்தில் அமைச்சு ரீதியில் எந்தவிதமான குற்ற அம்சமும் அதிகாரக் துஷ்பிரயோகமும் நடக்கவில்லை என்று கடந்த ஜூலை 3ஆம் தேதி MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி உறுதி செய்திருப்பதை அடுத்து அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.
இன்று மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். MyKiosk திட்டம் குறித்து வீண்பழிகளையும் அவதூறுகளையும் பரப்பியவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் சார்பாக நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் சொன்னார்.
MyKiosk 2.0 திட்டத்தின் அமலாக்கம் தொடர்பில் பத்து பகாட் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஓன் அபு பாக்கார் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
MyKiosk திட்டத்திற்கான டெண்டர், விலை தொடர்பில் சில தரப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை ஏதும் இல்லை என டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெளிவுபடுத்தி இருக்கிறார்.மை கியோஸ்க் திட்டம் இன்னும் 100 விழுக்காடு இலக்கை அடையவில்லை. நிர்வாக ரீதியாக சில பலவீனங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி வசமுள்ள மாநிலங்கள் உட்பட சில மாநிலங்களுக்கு நாங்கள் நேரில் சென்று நிலைமையைக் கண்டறிந்துள்ளோம். சிறு வியாபாரிகளுக்கு உதவவும் MyKiosk திட்டத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டம் 90 விழுக்காடும் இரண்டாவது கட்டம் 87 விழுக்காடும் அடைவு நிலையைப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.





















