மலேசிய சுங்கத் துறையின் போலி முத்திரைகளை பயன்படுத்தி, RM300,000 மதிப்புள்ள மதுபான போத்தல்களை வைத்திருந்த இருவர் கைது

மலாக்கா, மே 21 :

மாலிமிலுள்ள ஒரு வளாகத்தில் RM300,000 மதிப்புள்ள மதுபான போத்தல்களை வரி செலுத்தாது சேமித்து வைக்க, அரச மலேசிய சுங்கத் துறையின் போலி முத்திரைகளைப் பயன்படுத்திய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

46 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள், மலாக்கா போலீஸ் படைத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழுவினால், மாலிமில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு பிராண்டுகளின் மதுபானங்களை லோரிக்குள் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்போது, இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக மலாக்கா குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைவர், துணை ஆணையர் லிம் மெங் சீ கூறினார்.

மேலும் அந்த வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 732 பெட்டிகளில் பல்வேறு பிராண்டுகளின் 17,874 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“அவர்களின் செயல்பாடுகளை மறைக்க போலியான JKDM ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய சந்தையின்படி அனைத்து பறிமுதல்களின் மதிப்பு 300,000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.

“நாங்கள் இன்னும் அவற்றின் விநியோகம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம், ஆனால் சந்தேக நபர் இந்த வளாகத்தை ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்தே சேமிப்புக் கடையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

“விசாரணையின் விளைவாக, சந்தேக நபர் மதுபானம் உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறினார்,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (g) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here