அம்பாங் ஜெயாவில் பகல்நேரத் துணிச்சல் திருட்டு: பூட்டிய வீட்டில் RM25,000 மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

கோலாலம்பூர்:

ம்பாங் ஜெயா, புக்கிட் அந்தாரபங்சாவில் உள்ள தாமான் வாங்சா உகாய் பகுதியில், வீட்டின் உரிமையாளர் வேலைக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திப் புகுந்த திருடன் ஒருவன், RM25,000 மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணியளவில் நடந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, ‘பெரோடுவா மைவி’ ரக கார் ஒன்று வீட்டின் முன் வந்து நிற்பதும், அதில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைவதும் தெரியவந்தது.

வீட்டிற்குள் புகுந்த நபர் பல்வேறு விலைமதிப்பற்ற கைக்கடிகாரங்கள், தங்க நகைகள், ஒரு மடிக்கணினி மற்றும் கடன் அட்டைகளைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளான். இதன் மொத்த மதிப்பு RM25,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கைருல் அனுவார் காலிட் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

சம்பவம் நடந்த அன்று மாலை 4 மணியளவில் வீட்டில் உள்ள CCTV கேமராவைச் சோதித்தபோது கொள்ளை நடந்ததை உணர்ந்த உரிமையாளர் உடனடியாக போலீசில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டப்பிரிவு 457 (வீடு புகுந்து திருடுதல்)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தலைமறைவான நபரைப் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here