பெண்ணிடம் RM560,000 மோசடி செய்த தங்க வியாபாரி கைது

கோலாலம்பூர், மே 22 :

தலைநகரில் உள்ள ஜாலான் கான்லேயில், நேற்று அதிகாலை 916 தங்க வர்த்தக மோசடி தொடர்பாக 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரலில் உள்ள ஒரு விடுதியில் நடந்த சோதனையில், அந்த நபர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் தங்கம் வாங்குவதற்காக 560,000 வெள்ளியை சந்தேக நபரிடம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் தங்கத்தை வழங்காமல் பணத்தை பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார் என்று அந்தப்பெண் போலீசில் புகாரளித்தார்.

அந்தப் புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.

“நாங்கள் ஒரு கார், RM250,750 ரொக்கப் பணம், மூன்று மொபைல் போன்கள், ஒரு ஜோடி காலணிகள், ஒரு சட்டை மற்றும் பேன்ட், நிறுவனத்தின் முத்திரை, பை, காசோலை புத்தகம், பாஸ்போர்ட், சாவி மற்றும் வீட்டு அணுகல் அட்டை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தோம்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மே 24 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் வணிக நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தனிநபர் அல்லது நிறுவனத்தின் பின்னணியை முதலில் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்த எந்தத் தகவலும் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு 03-26002222 என்ற எண்ணில் அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-2159999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here