விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்கிறது போலீஸ்

கோலாலம்பூர், ஜூன் 30:

விலைவாசி உயர்வைக் கண்டித்து, நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கம்போங் பாருவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் போராட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்துகிறது.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடைபெறும் பேரணி குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது, ஆனால் ஏற்பாட்டாளர்களால் இப்போராட்டம் தொடர்பில் எந்த அறிவிப்பும் சமர்ப்பிக்கப்படவில்லை.

“இது ஒரு திட்டமிட்ட பேரணி பற்றி எங்களுக்குத் தெரியும். இருப்பினும், அமைதிப் பேரணி சட்டம் 2012 இன் பிரிவு 9(1) இன் கீழ் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஏற்பாட்டாளர்கள் தவறிவிட்டனர்.

​​”இந்த போராட்டத்தில் எந்தக் கட்சியினரும் அல்லது பொதுமக்களும் பங்கேற்க வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். மீறி கலந்து கொண்டால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, திட்டமிடப்பட்ட பேரணி நடைபெறும் பகுதியில் போலீசார் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கோழி, முட்டை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அடிப்படை பொருட்களுக்கான உணவு மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று, ஜூலை 1 ஆம் தேதி பார்ட்டி அமானா நெகாரா ஒரு பேரணிக்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் பேரணி தொடரும் என அதன் அணிதிரட்டல் பணியக இயக்குநர் முகமட் சானி ஹம்சான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here