பாகிஸ்தானில் ராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளரின் ஆடைகளை கிழித்து தாக்குதல்

பாகிஸ்தானில் ராணுவத்தை விமர்சித்ததற்காக 73 வயதான மூத்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் அயாஸ் அமீர் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தானின் அரசியலில் இராணுவத்தின் பங்கை குறிவைத்தார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்ட கருத்தரங்கில் அவர் பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல்களை “சொத்து வியாபாரிகள்” என்று குறிப்பிட்டார். மேலும் முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் ஆகியோரின் உருவப்படங்களை அகற்றிவிட்டு “சொத்து வியாபாரிகளை” மாற்றவும் பரிந்துரைத்தார்.

நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் இம்ரான் கான் செய்த தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.அமீரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அயாஸ் அமீர், லாகூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அமீர் தனது டிவி நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பாதி வழியில் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். தன்னை காரில் இருந்து வெளியே இழுத்து அவர்கள் தாக்கியதாக கூறினார். முகமூடி அணிந்த அந்த மர்ம நபர்கள் அவரை அடித்து அவரது ஆடைகளை கிழித்ததோடு மட்டுமல்லாமல், செல்போன் மற்றும் பணப்பையையும் எடுத்துச் சென்றனர். பரபரப்பான சாலையில் அங்கு மக்கள் திரண்டதும், அவர்கள் தப்பிவிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் அமைப்புகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here