பொறுமையின் அவசியமும், நன்மைகளும்!

நிதானம் மற்றும் பொறுமையாக இருப்பது என்பது ஒரு சிறந்த குணம். பொறுமையைக் கடைப்பிடிக்கும்போது உறவுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். அத்துடன் மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக வாழவும் முடியும்.

பொறுமையாக இருப்பதன் அவசியம்: பொறுமையாக இருக்கும் ஒருவரால், எளிதில் எரிச்சல், ஏமாற்றம் மற்றும் கோபம் அடையாமல் இருக்க முடியும். தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். அதனால் உணர்வு ரீதியாக பலமான மனிதராக இருப்பார்கள்.

பொறுமையாக இருப்பது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நல்லது. பொறுமை இழந்து கத்தும்போது தலைவலி, அல்சர், உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரும். நிதானமாக இருக்கும் ஒரு நபருக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் வருவதில்லை. மேலும், எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க முடியும். சிக்கலான சூழ்நிலைகளை கூட மிக அழகாக கையாள முடியும். நன்கு யோசித்து முடிவெடுக்க முடியும்.

நிதானமாக இருப்பதன் ஏழு பயன்கள்:

1. நீண்ட நாள் லட்சியங்களை நிறைவேற்றலாம்: ஒருவர் நிதானமாக இருப்பதன் மூலம் நீண்ட நாள் லட்சியங்களையும் நோக்கங்களையும் கனவுகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். தனது இலக்கை நோக்கி நிதானமாக நடைபோட வசதியாக திட்டங்கள் தீட்டி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வைத்து, இலக்கை அடைய வழிவகை செய்யும்.

2. அறிவுபூர்வமான முடிவெடுக்கும் திறன்: குழம்பி இருக்கும் ஒருவரால் நிதானமாக முடிவெடுக்கவே முடியாது. பொறுமையைக் கடைபிடிக்கும் ஒருவர் மிகச் சிறந்த, அறிவுபூர்வமான முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.

3. விடாமுயற்சி: ஒருவர் தனது முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கூட, நிதானமாக தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து விடாமுயற்சியுடன் தனது பயணத்தைத் தொடர வைத்து, வெற்றியை கிடைக்கச் செய்யும். வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடாது என்கிற விஷயம் இவங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

4. புதிய விஷயங்களைக் கற்றல்: பொறுமை மற்றும் நிதானத்தை கடைப்பிடிக்கும் ஒருவரால் புதிய விஷயங்களை நிதானமாக ஆர்வமாக கற்றுக்கொள்ள முடியும். அது அவருடைய வாழ்வை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

5. பிறர் சொல்வதைப் பொறுமையுடன் கேட்க முடியும்: நிதானமாக இருக்கும் ஒரு நபரால்தான் பிறர் தன்னிடம் சொல்லும் விஷயங்களை திறந்த மனதுடன் கேட்க முடியும். அதனால் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். பிறர் உடனான உறவு எப்போதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பிறர் இவர்களுடைய நட்பை எப்போதுமே விரும்புவார்கள்.

6. கருணை மற்றும் ஊக்கம்: தன்னுடைய நிதானமான குணத்தால் பிறரிடம் இருக்கும் குறைகளைப் பொருட்படுத்தாது, கருணையுடன் இருக்க முடியும். அன்பைப் பொழிந்து, அவர்களின் முயற்சிகளைப் பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் இவர்களால் முடியும்.

7. அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும்: பரபர என்று சிந்தனைகளை பல திக்கிலும் ஓட விடாமல், நிதானமாக சிந்திப்பதால் எப்போதும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை இவர்களால் வாழ முடியும். நாமும் நிதானத்தை கைப்பிடித்து சந்தோஷமாக வாழ்வோமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here