அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட உரிமையை ரத்து செய்ததை எதிர்த்து, ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட பேரணி!

மெல்போர்ன், ஜூலை 3 :

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்த நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து கடந்த 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்ட உரிமையை அதிரடியாக ரத்து செய்தது.

இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெண்களுக்கு ஆதரவாக 15,000 ஆஸ்திரேலியர்கள் அமெரிக்க கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக பேரணி நடத்தினர். ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த பிரம்மாண்ட பேரணியில், சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனர்.

ஆஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகளுக்காக நாங்கள் நிற்கிறோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் இப்போது இருப்பது போல், ஆஸ்திரேலியாவிலும் கருக்கலைப்பு சட்டங்கள் அந்தந்த மாநிலங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அந்நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 2019 இல் தான் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவிலும் கருக்கலைப்பு நடைமுறைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கெடுபிடிகள் தளர்த்தப்பட வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here