கோலாலம்பூர், ஜூலை 3:
சுகாதார அமைச்சகத்தின் CovidNow இணையதளத்தின் இன்று அதிகாலை 1.50 மணி நிலவரப்படி, நாட்டின் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மொத்தம் 1,358,223 சிறுவர்கள் அல்லது 38.3 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 1,747,444 சிறுவர்கள் அல்லது 49.3 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) மூலம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதற்கிடையில், நாட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 16,145,763 தனி நபர்கள் அல்லது 68.6 விழுக்காடு பெரியவர்கள் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 23,021,257 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 23,298,617 பேர் அல்லது 99.0 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் செலுத்தியுள்ளனர்.
12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு, மொத்தம் 2,907,454 நபர்கள் அல்லது 93.4 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,995,306 நபர்கள் அல்லது 96.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
நேற்று 5,958 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டது. அதில் முதல் டோஸாக 569 தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக 4,791 தடுப்பூசிகளும், 598 பூஸ்டர் டோஸ்களும் செலுத்தப்பட்டன. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 71,258,983 ஆகக் கொண்டுவந்துள்ளது.