கோலாலம்பூர், ஜூலை 13 :
புடுவிலுள்ள அச்சிடும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கு சிக்கிக் கொண்ட 3 வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்களையும் உள்ளூர் பெண் ஒருவரையும் தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் காப்பாற்ற முடிந்தது.
மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு இன்று காலை 5.34 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து “ஜலான் ஹாங் துவா மற்றும் ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து ஆறு வாகனங்களுடன் மொத்தம் 26 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“நாங்கள் இடத்திற்கு வந்தவுடன், ஒரு அச்சிடும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், அருகில் உள்ள கட்டிடத்திற்கு தீ பரவாமல் கட்டுப்படுத்த முடிந்தது என்றார்.
“ஏரியல் லேடர் பிளாட்ஃபார்ம் (ALP) இயந்திரத்தைப் பயன்படுத்தி 25 முதல் 45 வயதுக்குட்பட்ட 13 வெளிநாட்டு ஆண்களையும், 76 வயதான ஒரு உள்ளூர் பெண்ணையும் எங்களால் காப்பாற்ற முடிந்தது.
“காலை 7.24 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.










