பெந்தோங், ஆகஸ்ட் 11 :
இன்று அதிகாலை புக்கிட் திங்கி, ஜண்டா பைக்கில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் நடந்த ‘கேளிக்கை விருந்தில்’ பங்கு கொண்ட டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட தொழிலதிபர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட 46 வயது நபர் மற்றும் அனைத்து நபர்களும் போதைப்பொருள் பரிமாறப்படும் விருந்துக்காக அந்த பங்களாவை வாடகைக்கு எடுத்ததாக நம்பப்படுகிறது.
பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் ஜைஹாம் முகமட் கஹர் கூறுகையில், நள்ளிரவு 1 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போலீஸ் குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.
இந்த சோதனையில், எட்டு வெளிநாட்டவர்கள் உட்பட 15 ஆண்கள் மற்றும் 10 பெண்களை போலீசார் கைது செய்தனர், அவர்கள் அனைவரும் 18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் என்றார்.
மேலும் அவ்வளாகத்திலிருந்து “2.18 கிராம் எடையுள்ள கெட்டமைன் வகை போதைப்பொருள் மற்றும் 1.43 கிராம் எடையுள்ள எக்ஸ்டசி மாத்திரைகள் (RM800 மதிப்பிலானவை என மதிப்பிடப்பட்டுள்ளது) என்பனவும் கைப்பற்றப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் கேளிக்கை விருந்தில் பங்கேற்ற அனைவரும் மெத்தம்பேட்டமைனுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்ததாக ஜைஹாம் கூறினார்.
போதைப்பொருள் விநியோகம் மற்றும் கேளிக்கை விருந்தின் ஏற்பாட்டாளர்களை அடையாளம் காண போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகநபர்கள் அனைவரும் இன்று தொடக்கம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952ன் பிரிவு 12(2) மற்றும் பிரிவு 15(1)(a) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
மேலும், தகவல் வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், போதைப்பொருள் விவகாரத்தில் தமது கட்சி யாருடனும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் எப்போதும் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.