நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பிரதமருக்கு இறுதி எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை ; அகமட் மஸ்லான் தகவல்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 :

நாடாளுமன்றத்தை கலைக்கவோ அல்லது பதவி நீக்கம் செய்யபடுவார் என்றோ பிரதமருக்கு இறுதி எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்று டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

“அரசியல் பேரவைக் கூட்டத்தின் போது இவ்வாறான கருத்து ஒருமுறை கூட கொண்டுவரப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு அத்தகைய இறுதி எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை” என்று அம்னோ பொதுச்செயலாளருமான அவர் மறுப்புக் கூறினார்.

“டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வழக்கு முடிவைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஒரு சோகமான சூழ்நிலை நிலவிய போதிலும், புதன்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு (நானும் கலந்து கொண்டேன்) நடைபெற்ற கூட்டம் சிறப்பாக நடந்தது” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) தந்து அதிகாரப்பூர்வ டூவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள ஒரு டுவீட்டில் கூறினார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அல்லது கட்சியால் அவர் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாயின.

அவ்வாறு அவதூறான செய்திகளை வெளியிட்ட இரண்டு செய்தி இணையதளங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்னோவின் இளையோர் பிரிவு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here