ஷா ஆலாம், செப்டம்பர் 15 :
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி காலமான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (செப். 17) முதல் மூன்று நாட்களுக்கு மாநிலக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
70 ஆண்டுகள் அரியணையில் அமர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இவ்வுலகத்தை விட்டு மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் சுல்தான் ஷராஃபுதீனின் நல்லுறவை வெளிப்படுத்துவதாகவும் இந்த ஆணை இருப்பதாக மாநில செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.
இந்த ஆணையின்படி, சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலுடன் மாநிலக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு சிலாங்கூரில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, நேற்று புதன்கிழமை (செப். 14) கூடிய மாநிலச் செயற்குழு கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளது என்று அவர் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
96 வயதான ராணி இரண்டாம் எலிசபெத், பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியாவார். அத்தோடு பிரான்சின் மன்னர் லூயிஸ் XIV க்குப் பிறகு, உலக வரலாற்றில் இரண்டாவது நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் (அரசி) என்ற பெருமைக்குரியவரும் இவரேயாவார்.