கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

நைரோபி, அக்டோபர் 26 :

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் (வயது 49). இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்று விட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் கென்யாவில் தலைநகர் நைரோபி அருகில் உள்ள கஜியாடோ என்ற இடத்தில் ஒரு சாலைத்தடுப்பில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் அங்கு ஒரு அறிக்கை வெளியானது.

ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்தில் திருட்டுப்போன ஒரு காரைப் பிடிப்பதற்காக போலீசார் சாலைத்தடுப்பு ஏற்படுத்தி இருந்ததாகவும், அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டு விட்டதாகவும் போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.

அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அர்ஷாத் ஷெரீப்பின் மனைவி ஜாவேரியா சித்திக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ” நான் ஒரு அன்பான நண்பரை, கணவரை, எனக்கு பிடித்த பத்திரிகையாளரை இழந்து விட்டேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here