மீண்டும் பரபரப்பு.. திடீர் விமான விபத்தில் இரண்டு இந்தியர்கள் பலி

ஒட்டாவா: கனடா நாட்டில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விமான விபத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும்.

அங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா என்ற மாகாணத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதாரமே இல்லாமல் குற்றஞ்சாட்டியதே இதற்குக் காரணம். இதற்கிடையே அதே பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் விபத்து நடந்துள்ளது. இதில் இரண்டு இந்தியப் பயிற்சி விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

விபத்து: இப்படி இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்தே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க நேற்று அங்கே நடந்த விமான விபத்தில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் இரண்டு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டு பயிற்சி விமானிகளும் பைபர் பிஏ-34 செனெகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட சிறிய விமானத்தில் பயணித்துள்ளனர். அந்த விமானம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வான்கூவருக்கு அருகில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே வரும் போது இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.. இருப்பினும், இதற்கான காரணம் சரியாக தெரியவில்லை.

இந்தியர்கள்: இந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட விமானிகள் 25 வயதான அபய் காத்ரு மற்றும் யாஷ் விஜய் ராமுகடே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களுடன் மற்றொரு நபரும் அந்த விமானத்தில் இருந்த நிலையில், மூன்று பேருமே இந்த விபத்தில் உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் வீடுகள் எதுவும் இல்லை. இதனால் அங்கே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

நன்கு சென்று கொண்டிருந்த விமானம் திடீரென எப்படி விபத்தில் சிக்கியது என்று தெரியவில்லை. இது தொடர்பாகக் கனடா அரசு விசாரணையை ஆரம்பித்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததால் பொதுமக்கள் யாருக்கும் இதில் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் நடந்தவுடன் ஐந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ரொம்ப நல்லவர்: இந்த விபத்தில் உயிரிழந்த அபய் காத்ரு மும்பையின் வசை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் விமானி பயிற்சி பெறவே கனடா சென்றிருந்தார். ஆனால், அவருக்கு இப்படியொரு முடிவு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அபய் காத்ரு பழகுவதற்கு இனிமையான நபர் என்றும் அவர் இந்த சின்ன வயதில் உயிரிழந்துவிட்டதை தங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றும் மும்பையில் உள்ள அபய் காத்ருவின் வீட்டின் அருகே வசிப்போர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், “சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு எங்களுக்கு போன் வந்தது. அபய்க்கு இப்படி நடந்ததை நம்பவே முடியவில்லை. அவனது தம்பி சிராக்கும் கடந்தாண்டு முதல் கனடாவில் தான் படித்து வருகிறான். கனடா அதிகாரிகள் அபயின் உடலைப் பார்க்க சிராக்கை அனுமதிக்கவில்லை. மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு அழைத்து வரவும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதற்காகத் தூதரகத்திடம் தவி கோரியுள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here