இன்முகத்துடன் பிரச்சாரம் ; வாக்காளர்களைக் கவரும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்

இம்மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது பெரா நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முனைகின்றார்.
இந்நிலையில் இந்தத் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பிரதமருக்கு அப்பகுதி வாழ் மக்களிடம் பேராதரவு கிடைத்துள்ளது.

குறிப்பாக, நேற்றுக் காலை கெராயோங் சந்தையில் வாக்கு சேகரிக்க வந்திருந்த டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை சந்தித்த மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முனைந்தனர். பிரதமரும் மக்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் கலந்துரையாடிய அதே சமயம் இம்முறை பெரா நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக களமிறங்கும் அபாஸ் அவாங்கும் அச்சந்தையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

இதனால் இருவரும் சந்திக்க நேர்ந்தது. பிரதமர் எதிர்த்தரப்பு வேட்பாளரை இன்முகத்துடன் வரவேற்று இருவரும் உரையாடினர். அது மட்டுமல்லாது நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளருடன் வந்திருந்த குவாய் சட்டமன்ற வேட்பாளர் நோராய்னி அப்துல் கனி, திரியாங் சட்டமன்ற வேட்பாளர் லியோங் இயூ மான் ஆகியோருடனும் பிரதமர் உரையாடினார்.

பிரதமரின் இந்த உயர்நிலை செயலானது அங்கிருந்த மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. அதன் பிறகு பிரதமர் அந்த சந்தையில் உள்ள கடைக்காரர்கள், பொதுமக்களுடன் நலன் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான்.

இந்நிலையில் இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான் மீண்டும் பிரதமராவார் என்பதனை அம்னோ கட்சியின் தகவல் பிரிவின் தலைவர் ஷாரில் ஃசீபியான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த முடிவானது கட்சியின் உயர் தலைமைத்துவம் எடுத்ததாகும். அம்னோ தலைவர் டத்தோ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியும் இம்முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேசமயம், எந்தவொரு நீதிமன்ற வழக்குகளையும் தடுத்து நிறுத்தும் எண்ணம் கிடையாது. மாறாக, தேர்தலில் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுபோல் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான் நீடிப்பார் என்று அலோர்காஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஷாரில் நேற்று முன்தினம் அங்கு நடத்தப்பட்ட தீபாவளி விருந்தோம்பல் நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையே, டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற அம்னோவின் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

இதில் மாற்றம் ஏதும் கிடையாது என்று கடந்த மாதம் நடைபெற்ற பாகான் டத்தோக் அம்னோ தொகுதி கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடியும் உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here